தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Thursday, November 29, 2012

தமிழக முதலமைச்சருடன் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?


தீபவளி அன்று வெளியான துப்பாக்கி திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இந்த பின்னணியில் துப்பாக்கி படக் குழுவினர் இது குறித்து தமிழக முதல்வரை சந்திக்க முயற்சித்தனர். தமிழக முதலமைச்சர் இவர்களை பார்க்க மறுத்து விட்டார். உள்துறைச் செயலாளர் ராஜகோபாலனை படக் குழுவினர் சந்தித்தனர். வர்த்தக ரீதியாக படம் எடுக்கின்றீர்கள். நீங்கள் பொறுப்புணர்வு இல்லாமல் படம் எடுத்து விட்டு பின்பு பாதுகாப்பு கேட்டால் எங்களால் தர இயலாது. புண்பட்ட முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசி சுமூக நிலையை ஏற்படுத்துங்கள் என்று உள்துறைச் செயலாளர் திரு. இராஜகோபாலன் படக் குழுவினருக்கு அறிவுறுத்தினார். இதன் பிறகு தான் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதுடன் பகிரங்க மன்னிப்பு கேட்டனர். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சமூகத்தின் எதிர்ப்பின் காரணமாக ஒரு திரைப்படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டதும் திரைப்படக் குழுவினர் பகிரங்கமாக முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகள் முன்னிலையில் பத்திரிகையாளர் கூட்டத்தில் மன்னிப்பு கேட்டதும் இதுவே முதன் முறையாகும். இந்த பின்னணியில் துப்பாக்கி பட விவகாரத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை புரிந்து செயல்பட்ட தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றித் தெரிவிப்பதுடள் சமுதாயத்தின் முக்கிய கோரிக்கைகளை அவரிடம் எடுத்துரைப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமைச் செயலகத்தில் நேற்று (நவம்பர் 28) தமிழக முதலமைச்சரைச் சந்தித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துஸ் ஸமது, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி
ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான் ஹழ்ரத், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ முஹம்மது ஹனிபா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக ஏ.எஸ். இஸ்மாயீல், எஸ்டிபிஐ சார்பாக அப்துல் ஹமீது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எஸ்.எம். பாக்கர் மற்றும் முனீர், ஜமாஅத்தே இஸ்லாமி சார்பாக மவ்லவி ஹனிபா மன்பஈ, வெல்பேர் பார்டி சார்பாக எஸ்.என். சிக்கந்தர், இந்திய தேசிய லீக் சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஜி.கே. நிஜாமுத்தீன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பாக அ.ச. உமர் பாரூக், தேசீய லீக் சார்பாக பஷீர் அஹ்மது, சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை சார்பாக மேலை நாஸர், ஜம்யித்தே உலமா சார்பாக மவ்லவி மன்சூர் காஷிபி, இஸ்லாமிய விpழிப்புணர்வு கழகம் சார்பாக மவ்லவி தர்வேஷ் ரஷாதி, ஐக்கிய சமாதான பேரவை சார்பாக மவ்லவி முஜீபுர் ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பாக மன்சூர் ஹாஜியார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
முதலமைச்சர் அவர்களுடனான இச்சந்திப்பின் போது தொடக்கமாக பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லா முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து துப்பாக்கி பட விவகாரத்தில் துரிதமான நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
பிறகு சமுதாயத்தின் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தது போல் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை அதிகரித்துத் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
2009ல் கொண்டு வரப்பட்ட கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு தகுந்த விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இது குறித்து சட்டமன்றத்தில் பேசியதையும் அமைச்சரிடம் எடுத்துரைத்ததையும் எடுத்துரைத்தார்.
குழந்தை திருமணம் என்ற பெயரில் முஸ்லிம் திருமணங்களில் அரசு அதிகாரிகள் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். முஸ்லிம் திருமணங்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம் தனியார் சட்டமே பொருந்தும். முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண் பூப்பெய்தும் வயதே திருமணத்திற்கான வயது. டெல்லி உயர்நீதி மன்றமே இதை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது என்று பேராசிரியர் குறிப்பிட்ட போது முதலமைச்சர் குறுக்கீட்டு அந்த தீர்ப்பு விவரங்களை கேட்;டார். பேராசிரியர் அந்த தீர்ப்பின் நகலை முதலைமைச்சரிடம் வழங்கினார். மேலும் அவர் இது குறித்து பேசும் போது குழந்தை திருமணத் தடைச் சட்டத்தில் கூட மணமகள் புகார் தெரிவித்தால் தான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்பவர்களை கைதுச் செய்ய இயலும். இந்த நெறிமுறையை கூட காவல்துறை பின்பற்றுவதில்லை என்று சுட்டிக் காட்டினார்.
தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை தாய்மொழியாக கொண்ட மக்கள் தம் தாய்மொழியில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை தம் தாய் மொழியை படிப்பதற்கும் தேர்வு எழுதுவதற்கும் மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்வதற்கும் ஆவணச் செய்ய வேண்டும். சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சிறுபான்மை மொழிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென பேராசிரியர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் நீண்டக் காலமாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைத்தனர். கடந்த காலங்களில் நீங்கள் அவ்வாறு செய்துள்ளீர்கள் என்று குறிப்பிட்ட போது அவ்வாறு செய்வது இப்போது எங்கள் கொள்கை இல்லை என்று முதலமைச்சர் பதிலளித்தார். இந்நிலையில் குறைந்த பட்சம் 60 வயதிற்கு மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளையாவது பொது மன்னிப்பு அளித்து விடுதலைச் செய்யுங்கள் என்று பேராசிரியர் கேட்டுக் கொண்டார். கோவையில் அபுதாகிர் என்ற சிறைவாசி உயிருக்கு போராடி வரும் நிலையில் அவருக்கு நீதிமன்றம் அளித்த பரோலில் விடுவதற்கு கூட அரசு மறுத்து வருவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு பேராசிரியர் கொண்டு வந்தார்.
தமிழ்நாட்டில் லாட்டரியை தடைச் செய்தது போல் மது கடைகளையும் மூட வேண்டுமென்று முஸ்லிம் தலைவர்கள் முதல்வரிடம் கேட்டுக் கொண்டனர்.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் முஸ்லிம் தலைவர்கள் அளித்தனர். இஸ்லாத்திற்கு மதம் மாறும் தலித் மக்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாக கருதப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வக்ப் சொத்துகள் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அதில் அடங்கும்.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் இறுதியில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் கனிவுடன் பரிசீலிப்போம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
இச்சந்திப்பிற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் அதிமுகவை ஆதரிக்கும் என்பதற்கு இச்சந்திப்பு முன்னோட்டமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா இது சமுதாய ரீதியான கோரிக்கைகளை முன்வைக்கவும் துப்பாக்கி விவகாரத்தில் நன்றிச் சொல்லவும் நடைபெற்ற சந்திப்பு. இதற்கு அரசியல் வர்ணம் பூச வேண்டாம் என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment