தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Wednesday, May 1, 2013

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை பெற்ற அனைத்து கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் - மமக கோரிக்கை


30.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் நீதி நிருவாகம், சட்டத் துறை, சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிசி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி மற்றும் சிறுபான்மையினர் அனைத்துப் பிரிவினருக்கும் 35 வயது என்று நிர்ணயம் செய்துள்ளது. பொதுப்பிரிவினருக்கு 30 வயது என நிர்ணயம் செய்துள்ளது.

இந்தத் தேர்வு யுபிஎஸ்சி-ஐப்போல் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவதில்லை ஒரு முறை அறிவிப்பு செய்து தேர்வு நடத்தி, பணி நியமனம் பெறுவதற்கு 3 ஆண்டுகள் ஆகின்றது ஆகவே குறைந்த வாய்ப்புகளே பெறுவதற்கான சூழ்நிலை இருப்பதால், நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுகளில் உச்சபட்ச வயதுவரம்பை 45 ஆக மாற்றிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள ஆணையாளர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும் தகவல் ஆணையர்களாக ஒய்வுபெற்ற அரசு அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளார்கள். தகவல் உரிமை ஆணையாளர்களாக சமூக ஆர்வலர்களை நியமித்தால் மேலும் பயனுள்ளதாக அமையும். இதேபோல் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். அரசு அலுவலகங்களில் தகவல் உரிமை பெறும் சட்டத்தின்கீழ் முதன்மைத் தகவல் அலுவலர்களாக நியமிக்கப்படுகிறவர்களுக்கு இது கூடுதல் பணிச் சுமையாக இருக்கிறது, எனவே, தனி அலுவலர்களை இப்பணிக்காக நியமிக்கவேண்டும்.

உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழ் மக்களும். மனித உரிமை ஆர்வலர்களும் வைக்கக்கூடிய மிகப்பெரிய கோரிக்கையாக இருக்கக்கூடிய மரண தண்டனை பெற்று 20 வருடங்களுக்கு மேலாக தமிழக சிறையில் வாழ்ந்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகிய 3 பேரையும் காப்பாற்ற அமைச்சரவை கூடி ஆளுநர் மூலம் பொது மன்னிப்பு வழங்கிட தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த காலங்களிலே பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா, எம்.ஜி.ஆர், ஆகியோரின் பிறந்த நாள்களின் போது ஆயுள் தண்டனைப் பெற்ற நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்தவர்கள் அரசியல் நிர்ணயச் சட்டம் 161 ன் பொது மன்னிப்பு அளித்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளர்கள். இதே அடிப்படையில் தற்போது தமிழகச் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை பெற்ற அனைத்து கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

60 வயது முடிந்த மூத்த குடிமக்கள் எந்த வழக்குகளில் தண்டனை பெற்றிருந்தாலும் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தில் ஏற்படும் துயர நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள அவர்களை அனுப்புகின்ற அதிகாரம் சிறை நிருவாகத்திற்கு இருப்பது போன்று, நீதிமன்ற காவலில் இருப்பவர்களையும் சிறை நிருவாகம் அனுப்புகின்ற வகையிலே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் அபுதாகிர் என்பவர் எஸ்.எல்.ஈ என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவரை பரோலில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும்கூட அவர் விடுவிக்கப்படவில்லை. அபுதாகிரின் உடல்நலனை கவனத்தில் கொண்டு அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

செங்கல்பட்டு மற்றும் பூவிருந்தவல்வி சிறப்பு முகாம்களில் மிகவும் வருந்தத்தக்க முறையிலே இலங்கைத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்குகள் எதுவும் இன்றி சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களும் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டவர்களும், தண்டனை அனுபவித்து விடுவிக்கப்பட்டவர்களும் சிறப்பு முகாம்களில் காலவரையற்று அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் சிறையில் இருந்தால் 3 வேளை உணவும் இதர வசதிகளும் கிடைத்திருக்கும். இந்த சிறப்பு முகாம்களில் அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.70 மட்டுமே கொடுக்கப்படுகின்றது. மேலும் பூவிருந்தவல்லி சிறப்பு முகாமில் மிகவும் மோசமான நிலையில் உள்ள அறைகளில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களை நேர்காணல் காண்பதும் மிகவும் சிரமமாக உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்குத் தொடர்ச்சியாக பல நன்மைகளை செய்துவரும் இந்த அரசு பூவிருந்தவல்லி மற்றும் செங்கல்பட்டு முகாம்களை மூடிவிட்டு அங்குள்ளவர்களை கும்மிடிபூண்டி மற்றும் மண்டபம் போன்ற திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் உள்ள நடுவண் சிறைகளில் தலா 3 மருத்துவர்களை நியமனம் செய்து சுழற்சி முறையில் எப்போதும் ஒரு மருத்துவர் இருக்கின்ற முறையில் ஆவன செய்ய வேண்டும். இதேபோன்று 3 செவிலியர் 3 மருந்தாளுநர்கள், தலா இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள், தேவையான அளவிற்கு உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகள் மற்றும் மனநல ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறைச்சாலைகளில் சிறைவாசிகள் தங்களுடைய வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர்களிடமும், குடும்பத்தார்களிடமும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் தொலைபேசிமூலம் பேசுவதற்கான வாய்ப்பு பல மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல தமிழக சிறைகளிலும் தொலைபேசி வசதி செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக சிறைத்துறையில் இரண்டு துணைத் தலைவர் ஒரு கண்காணிப்பாளர் 14 கூடுதல் கண்காணிப்பாளர் பதவிகள் உட்பட பல பதவிகள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. இவைகள் அனைத்தும் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.

நடுவண் சிறையிலே பணிபுரிகின்ற 3 பெண் சிறை அதிகாரிகள் ஆண்கள் சிறைகளிலும் பணிபுரிய வேண்டும் என்று ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

2011-12 சிறை மானியக் கோரிக்கையிலே ஆண் சிறை அதிகாரிகளுக்கு நிகராக பெண் சிறை மானியக் கோரிக்கையிலே ஆண் சிறை அதிகாரிகளுக்கு நிகராக பெண் சிறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்படுமென்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். இன்னும் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்குச் கொண்டுவருகிறேன்.

No comments:

Post a Comment